தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் நெல்லை, ராமநாதபுரம் தவிர்த்து 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

”தமிழகக் கடற்கரை, அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும் குறைந்தபட்ச வெப்ப நிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்ச மழை பெய்த விவரம்:

விரகனூர் அணை (மதுரை), மதுரை இஸ்ரோ (மதுரை) தலா 10 செ.மீ., மதுரை விமான நிலையம் (மதுரை) 8 செ.மீ., திருமங்கலம் (மதுரை), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), வத்திராயிருப்பு (விருதுநகர்), மதுரை தெற்கு (மதுரை) தலா 7 செ.மீ., விளாத்திகுளம் (தூத்துக்குடி), கோவில்பட்டி (தூத்துக்குடி) தலா 5 செ.மீ., கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), சாத்தூர் (விருதுநகர்) தலா 4 செ.மீ., பிளவக்கல் (விருதுநகர்), சோழவந்தான் (மதுரை), எட்டயபுரம் (தூத்துக்குடி), சித்தாம்பட்டி (மதுரை ) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment