இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படும் “800” என்ற திரைப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் தொடர்பாக முத்தையா முரளிதனுக்கு எதிராகவும் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் ஆதரவாகவும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

“800” திரைப்படத்தின் கதாநாயகனாக முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாக இந்தியா, இலங்கை உள்பட பல நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் மிக அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சர்ச்சைகளுக்கு அப்பால், இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய முத்தையா முரளிதரன், உலக அளவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்ற ஒரு தமிழனாக விளங்கி வருகிறார்.

எனினும், முத்தையா முரளிதரன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழியில் பேசுகின்றமை, தமிழர்கள் மத்தியில் தொடர்ச்சியாக ஒரு அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.

அதுமாத்திரமன்றி, இலங்கையின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளின்போது, முத்தையா முரளிதரன் மற்றும் அவரது குடும்பத்தினர், யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் சேர்ந்து பயணித்தமையும், ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், ‘நான் முதலில் இலங்கையன்… அதன் பின்னரே தமிழன்” என்று முத்தையா முரளிதரன் கூறிய கருத்து, அண்மையில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை அவதானிக்கலாம்.

முத்தையா முரளிதரனின் இந்த கருத்தானது, அண்மை காலமாக மீண்டும் ஒரு சர்ச்சையை சமூக வலைதளங்களில் தோற்றுவித்திருந்தது.

முத்தையா முரளிதரனால் வெளியிடப்பட்ட இந்த கருத்தை, விஜய் சேதுபதி தனது திரைப்படத்தில் கூறுவாரா? எனவும் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், டிவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற பெயரில் லட்சக்கணக்கானோர் கருத்துகளை பதிவிட்டு இலங்கை தமிழருக்கு ஆதரவான உணர்வையும், எதிர்ப்பையும் பதிவிட்டு வருகிறார்கள். எனினும், விஜய் சேதுபதியோ முரளிதரனின் நேரடி தரப்போ இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து வெளியிடவில்லை. அதே நேரம், கடந்த வாரம் நடிகர் விஜய் சேதுபதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், முத்தையா முரளிதனின் வரலாறு படத்தில் தானும் அங்கமாக இருப்பதில் பெருமைப்படுவதாக கூறியிருந்தார்.

Honoured to be a part of this landmark project. Update soon #MuthiahMuralidaran #MovieTrainMP #MuralidaranBiopic #MSSripathy #Vivekrangachari

Gepostet von Vijay Sethupathi am Donnerstag, 8. Oktober 2020

இவ்வாறான சர்ச்சைகளின் பின்னணியில், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் “800” திரைப்படத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சுமார் 2 வருட காலத்திற்கு முன்னரே முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் இடம்பெற்ற சுவாரஸ்யங்களை, பட தயாரிப்பு குழு பதிவு செய்து கொண்டதுடன், அந்த கால பகுதியிலிருந்தே திரைப்படத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முத்தையா முரளிதரனின் குடும்பத்தினர் பிபிசி தமிழிடம் கூறினர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் இந்த திரைப்படத்தை பற்றி எவ்வாறான நிலைப்பாடுகளை கொண்டுள்ளார்கள் என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

படப்பதிவில் எது பிரச்சனையாகும்?

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில், அவரது சாதனைகள் மற்றும் அவரது வாழ்க்கை தொடர்பிலான விடயங்கள் உள்ளடங்கியிருந்தால், தாம் அதனை வரவேற்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஜெயரட்ணம் துவாரகன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதை விடுத்து, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் ஈழத் தமிழர்களை தொடர்புபடுத்தி, தேவையற்ற விடயங்கள் உள்ளடக்கப்படுவதாக இருந்தால், ஈழத் தமிழர்கள் மத்தியில் அது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவிக்கும் என அவர் கூறுகிறார்.

ஈழப் போராட்டத்தின்போது முத்தையா முரளிதரன், ஈழப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதனால், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மாத்திரம் மையப்படுத்தி இந்த திரைபடம் எடுக்கப்படுவதாக இருந்தால், அதில் எந்தவித பிரச்சனைகளும் கிடையாது என கூறும் ஜெயரட்ணம் துவாரகன், ஈழத்தை மையப்படுத்தி படம் எடுக்கப்படுவதாக இருந்தால் அது பிரச்சனைக்குரிய விடயம் என குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் ஒருவருடைய வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகின்றது என்பதை எண்ணி பார்க்கும் போது அது மகிழ்ச்சி அளிக்கும் விடயம் என இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ்.சக்சிவர்ணன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, மிகவும் சிறந்ததொரு விடயம் எனவும் அவர் கூறினார்.

தமிழர் எதிர்ப்பு ஏன் தீவிரமாகிறது?

முத்தையா முரளிதரனை, அனைவரும் ஒரு விளையாட்டு வீரராகவும், ஒரு சாதனையாளராகவுமே அவதானிப்பதாக கூறும் எஸ்.சக்சிவர்ணன், அவர் அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தார் என்பதை இளைய சமூகத்திற்கு இந்த திரைப்படத்தின் ஊடாக கூற வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.

எனினும், இலங்கை அரசியலோடு முத்தையா முரளிதரன் பயணிக்கின்றமையினாலேயே, அவருக்கு தமிழர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பு எழுந்துள்ளதாக எஸ்.சக்சிவர்ணன் தெரிவிக்கின்றார்.

முத்தையா முரளிதரன் பல்வேறு சந்தர்ப்பங்களில், தன்னை தமிழனாக அடையாளப்படுத்த தவறியமையும், தமிழர்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு எழுவதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

முத்தையா முரளிதரனை ஒரு விளையாட்டு வீரராக தமிழர்கள் விரும்பினாலும், இலங்கை அரசியல் மற்றும் தமிழர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த பல இடங்களில் தவறியமையினாலேயே அவரை பெரும்பாலான தமிழர்கள் புறக்கணிக்க காரணமாக இருந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கை திரைப்பட துறையின் பதில்

இலங்கையின் அடையாளம், இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி என்ற முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இலங்கையிலேயே எடுத்திருக்க வேண்டும் என இலங்கை திரைப்பட தயாரிப்பாளர் ரேணுகா பாலசூரிய பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

உலக விளையாட்டு ரசிகர்களினால் மிகவும் அன்புடன் பார்க்கக்கூடிய முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு இந்தியாவில் படமாக்கப்படுவது குறித்து, தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறுகின்றார்.

பல 100 வருடங்கள் கடந்தும் இலங்கையில் இவ்வாறான சாதனை வீரர் ஒருவர் இருந்தார் என்பது இந்த திரைப்படத்தின் ஊடாக பதிவு செய்யப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, உலகிலுள்ள பலர் முத்தையா முரளிதரனை வீழ்த்துவதற்கு முயற்சித்த போதிலும், அவற்றையெல்லாம் கடந்து ஒரு சாதனை படைத்த வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக இலங்கை பிரபல திரைப்பட இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

விளையாட்டு ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அவரை வீழ்த்த முயற்சித்த போதிலும், அவர் அவற்றை எல்லாம் கடந்து 800 விக்கெட்களை கைப்பற்றியது என்பது மாபெரும் சாதனை என அவர் குறிப்பிடுகின்றார்.

அடுத்த தலைமுறையில் கூட முத்தையா முரளிதரனின் சாதனைகளை முறியடிக்க முடியுமா என்ற கேள்வி கூட எழுவதாக அவர் கூறுகிறார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை இயக்குநராக இருந்து, தன்னால் எடுக்க முடியாது போனது குறித்து கவலை அடைவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

குடும்பத்தாரின் கருத்து

இவ்வாறான எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த பின்னணியில், அவரது குடும்பத்தார் இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கின்றனர் என பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

முத்தையா முரளிதரன் மற்றும் அவரது குடும்ப தலைமுறைகள் அனைவரும் மலையகத்தில் பிறந்த, மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) என்பதை எவராலும் மாற்ற முடியாது என முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

யார் எவ்வாறான கருத்துக்களை வெளியிட்டாலும், தனது சகோதரன் என்றும் தமிழனாகவே இருப்பார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுகின்ற போதிலும், சாதனை வீரனான தனது சகோதரன் தொடர்பில் சாதனை படைத்த எவரும் தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதில்லை என அவர் கூறுகின்றார்.

முத்தையா முரளிதரன் தனது சொந்த முயற்சியில், எந்தவித பின்னணியும் இல்லாமல் இன்று உலகிலேயே தலை சிறந்த கிரிக்கெட் வீரராக பயணித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தனது சகோதரன் அரசியலில் எந்தவித பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும், அவர் ஒரு சாதனை குடிமகனாகவே ஆதரவு வழங்கியிருந்தார் எனவும் அவரது சகோதரர் குறிப்பிடுகிறார்.

முத்தையா முரளிதரன் தமிழ் மொழி மூலமாகவே தனது கல்வியை பயின்றார் எனவும், தமிழ் கழகமொன்றின் ஊடாகவே கிரிக்கெட் பிரவேசத்தை அவர் பெற்றார் எனவும் முத்தையா பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

எனினும், தம்மை சுற்றியிருக்கும் பலரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முத்தையா முரளிதரன் பெரும்பாலும் சிங்கள மொழியில் பேசுவார் என்ற போதிலும், அவர் என்றுமே தமிழ் மொழியை மறக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க எடுக்கவுள்ளமை தொடர்பில் அவரது குடும்பத்தார் என்ற வகையில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “800” படம், இலங்கை, இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவிருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் படப்பிடிப்பு தொடங்கி, 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

இதற்கிடையே, தற்போதைய சர்ச்சை தொடர்பாக “800” திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தார் (Dar) மோஷன் பிக்சர்ஸ் புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், முத்தையா முரளிதனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பல்வேறு வகையில் அரசியலாக்கப்பட்டு வருவதை அறிகிறோம். “800” திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழக்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக அது இருக்கும் என்று கூறியுள்ள தார் மோஷன்ஸ் நிறுவனம், ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையிலான காட்சியமைப்புகள் அதில் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பல தமிழ் திரைத்துறையினர், கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கலைஞர்களுக்கும் கலைக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளை கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும், நம்பிக்கையையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம் என்று தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.

Leave a Comment