கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய தாராவிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகின் 200 நாடுகளுக்கும் மேல் பரவி அதன் வீரியத்தை காட்டிவருகிறது. முதலில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் தீவிரமாக பரவிவருகிறது. உலக அளவில் இதுவரை 1 கோடியே 23 லட்சத்து 73 ஆயிரத்து 722 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ள நிலையில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல, 67 லட்சத்து 86 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 8 லட்சத்திற்கு அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால், ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அங்கு காட்டுத்தீ போல கரோனா பரவிவந்தது. அதனால், மகாராஷ்டிரா அரசு, தாராவியில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனால், கடந்த சில வாரங்களாகவே, தாராவியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது.
நேற்று 12 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்ட நிலையில், தாராவியை குறிப்பிட்டு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர், “கடுமையான நடவடிக்கைகள் மூலம் கரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் தாராவி ஆகிய இடங்கள் நமக்கு நிரூபித்துள்ளன. உலக அளவில் கடந்த ஆறு வாரங்களாக கரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாக உள்ளது. வைரஸ் எவ்வளவு வேகமாக பரவினாலும், தீவிர நடவடிக்கைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற எடுத்துக்காட்டுகளும் கிடைத்துள்ளன” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment